Wednesday, 21 June 2017


சேர வாரும் செகத்தீரே! மார்க்ஸ் 200

        மார்க்சியம்/பொதுவுடைமை என்னும் கருத்துநிலை குறித்த பார்வை கொண்டோரைப் பொத்தாம் பொதுவாக மூன்றாக வகைப்படுத்திக் கொள்ளலாம்: மார்க்சியர்(Marxist), மார்க்சியல்லாதார்(Non-Marxist), மார்க்சிய எதிர்ப்பாளர்(Auti-Marxist).
        மார்க்சியரையும் கட்சி மார்க்சியர், கட்சி சாரா மார்க்சியரென்றல்லாம். உள்வகைப்படுத்தலாம்(கட்சிசாரா மார்க்சியர் இருக்க இயலாதென்பது பொதுவாகக் கட்சி மார்க்சியர் நிலைப்பாடு. மார்க்சியர்(Marxist) மார்க்சியலார்(Marxiolagist) என்றெல்லாமும் பார்க்க இயலும். இருக்கட்டும்.
        என்னைக் கட்சிசாரா மார்க்சியன் என்று சொல்லிக் கொள்ளலாம். இதுவும் இருக்கட்டும்.
        மார்க்சியர் இப்போது கருதவேண்டியது, மார்க்சியரல்லாதாரை மார்க்சியராக்குவது கூட அல்ல; எதிர்ப்பாளரை நோக்கிக் செல்லவிடாமல் செய்வதுதான். ஆனால், மார்க்சிய இணக்கம் கொண்ட என்போன்றோரைக் கூட - மேலோட்டமான கருத்து வேறுபாட்டைச் சொல்வதற்கே - மார்க்சியப்பிரஷ்டம் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.
        மத அடிப்படைவாத இருள் மிகவன்மையாகச் சூழ்ந்துவரும் நிலையில் மார்க்சியர் அந்தக் காலத் தஞ்சை மாவட்ட மாப்பிள்ளை முறுக்கிலிருப்பது நல்லதல்ல.
        இந்தப் பின்னணியில்தான் தோழர் தா.பா. நூலை ஆர்வமாகப் படித்தேன்.
        முன்னுரையைத் தன்னடக்கத்துடன் தொடங்கியுள்ளார் தா.பா. அது வெற்று மரபன்று என்று உணர முடிகிறது. எனினும் விபரீத சக்திகள் அடர்ந்து வரும் சூழலில் இனி பொறுப்பதில்லை என்று கருதி எழுத முற்பட்டதாகக் கூறுகிறார். மிகச் சரி.
        ஐந்து உட்பிரிவுகளுள் முதலாவது, ‘கேள்விகள்’ என்பதாகும். சிறிதும் பெரிதுமாக 41 வினாக்கள் வரிசை எண்ணிட்டு அடுக்கப்பட்டுள்ளன. ‘கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவிழந்து வருவது ஏன்?’ என்பது முதல் வினா. இந்த அடிப்படை வினாவிலிருந்து கிளைத்தவைதாம் பிறவினாக்கள் என்று சொல்லலாம்.
அரசியல் - பொருளாதாரம், வரலாறு, திட்டம் - செயல்பாடு, மெய்யியல் முதலியவற்றின் அடிப்படையில் சாமானியம் முதல் நுட்பமானவை வரை, பலருக்கும் பல நேரங்களில் எழுந்த வினாக்களை ஒரு சேர அவர் அடுக்கியுள்ளார். பொதுவுடைமையரின் வறட்டுத்தனங்கள், தவறுகள்(என அவர் கருதுவன) ஆகியவற்றோடு அபாண்டமாகச் சுமத்தப்பட்ட பழிகளையும் ஆதாரங்களோடு சுட்டுகிறார்.
        இருவேறு எல்லைக்கிடைப்பட்ட பொதுவுடைமைக்கட்சி, பிற இடதுசாரிகளுள் அவரது விடை தேடும் முறை, விளக்கம் தீர்வு முதலியவற்றை ஏற்காதவர்கள், இவ்வாறு ஏற்காததோடு சில பல வினாக்களைத் தவிர்க்கலாம் என்பவர்கள் புதிதாகச் சிலபல வினாக்களைச் சேர்க்கலாம் என்பவர்கள் எவராயினும் வினாக்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கக்கூடாது. இதுவே இந்த நூலின் முதலாவது முக்கியத்துவம்.
        வினாக்கள், விளக்கங்கள், தீர்வுகளுக்காகப் பட்டறிவும் பன்னூலறிவும் கொண்டு வரலாறு, நிகழ்ச்சிகள், புள்ளி விவரங்கள் முதலியவற்றை அவர் தந்து செல்லும் பாங்கு படிப்பார்வத்தைத் தூண்டுகிறது. தா.பா. சில பகுதிகளை முழுமையாகப் பக்கமாகக் காட்டியுள்ளார்; சில நூல்களைப் பரிந்துரைத்துள்ளார்.
        ஊன்றிப் படிக்க வேண்டிய பகுதிகள் தடிப்பெழுத்தில் தரப்பட்டுள்ளன.
மேதைகள், அறிஞர்கள். படிப்பாளிகளின் இயல்பும் எளிமையும் பற்றி அவர் காட்டும் சில பகுதிகள் நெகிழச் செய்கின்றன. சான்றாகப் பி.எச்.ஜோசி மும்பையில் உருவாக்கிய கம்யூன் பற்றிய பகுதி(பக்.203-204).

        அணிந்துரையில் ந. முத்துமோகன் “இந்த நூலுக்கு ஒரு பதிப்பாசிரியர் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என நயத்தக்க நாகரிகத்தோடு ஒரு விமரிசனக் குறிப்பை வைக்கிறார். சரிதான் என்றாலும், நூலின் நெகிழ்வு சலிப்பில்லாத ஓட்டத்திற்குக் காரணமென்று தோன்றுகிறது. மிகச்சில இடங்கள் தானெனினும் அணி நடையும் மிகையின்றி நயஞ்சேர்க்கிறது. சரளமாக எழுதிச் சொல்லும்போது சில இடங்களில் சிறிதே சுயமுரண் தலைகாட்டுவதாக எனக்குத்  தோன்றுகிறது. மனிதநேய அறநெறியும் மார்க்சிய விஞ்ஞான முறையும் முரணானவையல்ல என்றாலும் வெவ்வேறானவை.

Wednesday, 2 December 2015

ஆய்வுலகில் பேய் எழுத்து

தமிழாய்வுகளின் தரச்சரிவு பற்றிய குரல்கள் 1970களிலேயே எழுந்தன. கோ. கேசவனின் “மண்ணும் மனித உறவுகளும்“ நூல் அணிந்துரையில் க. கைலாசபதி குறைபட்டுக் கொண்டிருந்தார். 1980களில் நான் முனைவர் பட்ட ஆய்வு முடிந்ததற்கான பாராட்டு விழா ஏற்புரையில் போதாமையை – எனது போதாமையை, பட்டத்திற்கும் ஆய்வறிவிற்குமான இடைவெளியை – சுட்டிக்காட்டித் தட்டச்சிலும் அதனை அவையோர்க்குத் தந்தேன். வெங்கடசாமிநாதன் ஒரு முறை தமிழக அரசியல் பண்பாட்டுப் போக்கு இதற்குமேல் சீரழிய முடியாத அளவு தாழ்ந்துவிட்டது என்று கருதும்போதெல்லாம் அதற்கும் மேலாகத் தாழ்கிறது என்றெழுதினார்.
      தமிழாய்வுலகின் பேய் எழுத்துக்கு (Ghost Writing) சில வரலாற்றுப் படிநிலைகள் உண்டு. ஆய்வறியும் நுட்பமும் உடைய அறிஞர் சிலர், பணிச்சுமை முதலியன காரணமாய்ப் பேய் எழுத்தை நாடினர். இது முதற்கட்டம்.
பின்பு அரைகுறை அறிஞர்கள் குறைநிரப்பும் பொருட்டு, நிறைபுலமையுடைய பேய் எழுத்தாளரை நாடினர். இஃது அடுத்த கட்டம்.
அடுத்து ஏதுமறியாதார், அரைகுறை அறிவுடைய பேய் எழுத்தரை நாடினர்.
1990களில் ஏதுமறியா ஆய்வாளர் ஏதுமறியாப் பேய் எழுத்தரை நாடியதை உடனிருந்து கண்டதன் விளைவாக என் “ஆய்ந்திறம்“ வெளிவந்தது.
சலபதி(பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி) தம், “அந்தக் காலத்தில் காப்பி இல்லை“எனும் நூலின் “தமிழில் பகடி இலக்கியம்“ என்னும் கட்டுரையில் ஆய்ந்திறத்தைப் பிரபலப்படுத்தினார்.
1995 ஏப்ரலில் “கரந்தைத் தமிழ்ச் சங்க“ வெளியீடான “தமிழ்ப் பொழில்“ இதழில் “ஆய்ந்திறம்- முதற் பதிப்பு“ வெளியாயிற்று. எனது “அடிவானம் நோக்கிச் சில அடிகள்“ எனும் நூலின் இரண்டாம் பதிப்பில்(2014) பின்னிணைப்பாகத் தந்தேன். பதிப்பு முன்னுரையை அதில் காணலாம்; மூலத்தை மட்டும் வலைப்பூவில் அச்சிடுகிறேன்.

சிறப்புப் பாயிரம்

திருமால் வரை முதலாத் தென்குமரி யாயிடைப்
பலவாம்பல் கலைக்கழங் கல்லூரி தம்மோ
டளவிலார்; பயின்றிடவே யஞ்சல் வழிக்கல்வி
எனுமிவற்றாற் பட்டம் பெற்றார்; பலரவருள்
பணிபெறுதற் கிடையில்மேற் பட்டஞ் சிலபெறவும்
பணியிலுளார்; பதவியொடூ தியவுயர்;வு பெற்றிடவும்
பதிந்திடுவா ராராய்ச்சித் துறைகளிலே யன்னவர்;க்காய்க்
கண்ணுதலான் தருமிக்குக் காட்டிய நெறிமிகுத்து
மண்ணுலகின் மாநாடி யெனுந்தொகையு ளொன்றாக
விந்நூற்காய்த் திறமென்னு மினியபெயர்; தனைச்சூட்டித்
தந்தனன் றமிழாய்வு தழைத்திடப்
புளுகணிச் சித்தனெனும் புகழ்மிகு புலமையோனே.

நூல்

01. ஆய்வரே முயறலும் அடுத்தவர்; நாடலும்
   ஆயிரு வழியவாம் ஆய்வுரை ஆக்கல்
02. தாமே எண்ணித் தலைப்புத் தேர்;ந்து
   நூலகம் வல்லுநர்; களமிவை கண்டு
   தொகுத்துத் தரவுகள் வகுத்து நூலாக்கல்
   ஆய்வரே முயலும் வழியெனப் படுமே
03. அஃதிவண் நுவலா தடுத்தவர்; நாடி
   ஆய்வுரை ஆக்கிடும் வகைநுவன் றிசினே
04. பல்கலைக் கழகப் பதிவொன்று கொண்டே
   சொல்லவும் பெறுவர்; ஆய்வர்; எனச்சிலர்;
05. பதிந்தவர்; எனவிவர்ப் பகர்;தலே சரியாம்
06. அன்னவர்; தாமே அடுத்தவர்; நாடுவார்;
07. அடுத்தவ ரென்பா ரொப்பந்த மேற்றுக்
   கொடுத்தவா றாய்வுரை முடிப்பவ ராவார்;
08. ஆய்நெறி யாளரே ஒப்பந்த மேற்றலும்
   அடுத்தவ ரொருவரை யமர்;த்தித் தருதலும்
   ஆய்வர்;க்கு வாய்த்திடும் ஆகூழ் என்ப.
09. ஒப்பந் தம்மே பகுதியும் ;முழுமையும்
   எனவிரு பாற்படும் என்மனார்; தெரிந்தோர்;
10. பதிந்தவர்; தந்த தலைப்பிற் கேற்பப்
   பல்வகைத் தகவல் திரட்டி எழுதலும்
   அவர்தரு தரவுகள் அமைவுற வாக்கலும்
   இயல்சில மட்டும் எழுதித் தருதலும்
   பகுதியொப் பந்த முறையெனப் படுமே
11. முழுஒப் பந்த முறையது தானே
   தலைப்பு முதலாத் தட்டச் சிட்டுக்
   கட்டமைத் தாய்வுரை அளித்தல் ஈறா
   அனைத்துப் பணியும் ஆற்றுத லாகும்
12. ஒப்பந் தப்பணி ஒப்பிய ஒருவர்
   உள்ளொப் பந்தம் விடுதலும் உண்டு
13. ஒப்பந் தப்பணிக் காலங் காணின்
   இயல்பும் விரைவும் எனவிரு வகைத்தாம்
14. ஒப்படைத் திடற்கு நெடுநாள் முன்பே
   ஒப்பந் தஞ்சயெல் இயல்பா கும்மே
15. சின்னாள் முனர்ச்செயின் விரைவெனப் படுமே
16. ஆணையின் பின்னர்; ஆக்குத லன்றி
   ஆயத்த ஆய்வுரை ஆக்குநர்; உளரே.
17. அவர்;தாம்
   பக்க அளவினைப் பாங்குறப் பேணுவர்;
18. இளநிலைத் திட்டப் பணியுரை இரட்டல்
   முதுநிலைக் காகும் அவ்வுரை இரட்டல்
   மெய்யியல் முதுநிலைப் பட்ட ஆய்வுரை
   அஃதோர்; ஈரரை அளவாய் இழுப்பின்
   தகுமாம் முனைவர்; பட்டம் தனக்கே.
19. துறைதலைப் பொடுவகை காலமும் கருதித்
   தொகையினைப் பேசித் தொடங்குவர்; பணியை.
20. தொடங்கையில் முன்தொகை முடிவினில் முழுத்தொகை
   படிப்படி யாகத் தவணையாய்த் தருந்தொகை
   முழுமையாய் முன்னரோ பின்னரோ தருந்தொகை
   எனத்தொகை தருதல் பல்வகை யாமே
21. பரிந்துரை பேரம் எனுமிவ் வாற்றான்
   குறித்த தொகையினைக் குறைத்தலும் உண்டு.
22. நட்புப் பதவிசெல் வாக்கொடு நாடின்
   ஒப்பந் தத்தொகை தவிர்;க்கவும் கூடும்.
23. ஆய்வுரை அடுத்தவர்; ஆக்கலாம் ஆய்வரே
   வாய்மொழித் தேர்;வினுக் குரியவர்; ஆதலின்
   அவ்வுரை ஒருமுறை படித்திடல் நன்றாம்.
24. வாய்க்கு மாயின் தேர்;வரை ;நாடி
   உற்றுழி யுதவி உறுபொருள் கொடுத்தல்
   அதனினும் நன்றெனச் சிலர்;நவின் றிடுவர்;
25. முந்தையோ ராய்வுரை தம்பெய ரிட்டுத்
   தந்திடும் துணிவு விஞ்சிய முறைதான்
   அகப்பொருட் களவுகொள் அருந்தமிழ் நெறிபோல்
   புலத்துறைக் களவாம் புதுவதன் றாயினும்
   அழுக்கா றுடைச்சில வறிஞர்; காணின்
   இழுக்கெனக் கூறி யிகழ்வதோ டன்றிச்
   சட்டம் பேசிப் பட்டமும் தடுப்பர்;.
26. ஆதலின்
   பதிந்தவர் யாவரும் பாதுகாப் புடனே
   பற்றிடத் தக்கதிவ் ஆய்ந்திற நெறியே.

புறனடை

27. நாமே பல்கலைக் கழகம் நாடி
   எழுதியோ எழுதுவித் தோபெற லன்றிப்
   பல்கலைக் கழகம் தாமே வந்து
   பற்பல மதிப்பியற் பட்டம் நல்கல்
   அரசியல் திறமஃ தாய்ந்திறப் புறனடை.
*******


இப்போது என் “ஆய்ந்திறம்“ காலாவதியாகிவிட்டது. “தமிழாய்வாளர்கள்“ தாமே எதை எழுதினாலும் பட்டம் வாங்கிவிடலாம் என்கிற நிலை வந்துவிட்டது. எனவே அரைகுறைப் பேய்களுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. ஒரு சான்றை என் முகநூலில் (Mathivanan Balasundaram) பதிவுசெய்துள்ளேன். தொடர்புடைய விவாதங்களையும் அதில் காணலாம். சான்றை மட்டும் இங்குத் தருகிறேன்.